Friday, May 5, 2017

கடல் புறா

+2 படிக்கும் காலத்தில் ஒரு அதிகாலை வேளை. நான்கு மணி இருக்கும்.


"தம்பி! எழுந்திருப்பா! இன்னிக்கு பிசிக்ஸ் பரிட்சைன்னு சொன்னியே!"


சோம்பல் முறித்தபடியே கடுப்புடன் எழுந்தேன். பிசிக்ஸ் புத்தகத்தை பார்த்த பொழுதே குமட்டி கொண்டு வந்தது. வேண்டா வெறுப்பாக பிரித்தேன். ஒரு பக்கத்தை படிப்பதற்குள் ஒரு மாமாங்க நேரம் ஆனது போல தோன்றியது. வெறியின் உச்சத்தில் இருக்கையில் கண்ணில் நேற்று படித்து பாதி வைத்திருந்த ஒரு புத்தகம் அலமாரியில் துருத்தி கொண்டு தெரிந்தது.


எடுத்தேன், படித்தேன், அடுத்த மூன்று மணி நேரத்தில் ஐநூறு பக்கங்கள் கொண்ட "கடல் புறா" நாவலின் இரண்டாம் பாகத்தை முடித்தேன்! அன்று பரிட்சையில் 150 -க்கு 17. என் அப்பாவும் அம்மாவும் அதற்கு அடுத்த இரண்டு வாரங்கள் பள்ளிக்கு நடையாய் நடந்தது, டீ.சி கொடுப்பதிலிருந்து தப்பியது எல்லாம் இன்னொரு நாவலுக்கான சுவாரஸ்யங்கள்.


பாய்ண்டுக்கு வருவோம்! எழுத்தாளர் சாண்டில்யனின் மாஸ்டர் பீஸ் என்று கடல் புறாவைதான் சொல்வேன். பாஹுபலி என்ன பாஹுபலி, இளையபல்லவனின் ஹீரோயிசத்திற்கு முன்னர் பாஹுபலி எல்லாம் ஜுஜுபி. இத்தனை ஆண்டுகள் ஆனபின்னரும் இளையபல்லவனும், அநபாயச் சோழனும், காஞ்சனா தேவியும், மஞ்சள் அழகியும், அகூதாவும், அமீர் பாத்திரங்களும் நினைத்த மாத்திரத்தில் வந்து மறைவது என் ஞாபக சக்தியின் வெற்றி அல்ல, அந்த கதாபாத்திரங்களை படைத்த சாண்டில்யனின் வெற்றி.




கடல் புறா ஒரு சரித்திர காவியம்.சோழர்கள் வாணிபம் பொருட்டு கடல் கடந்து கடாரம் வரை ( இன்றைய மலேஷியா ) தங்கள் புலிக்கொடியை பறக்க விட்டிருந்த காலம். அதை சாத்தியமாக்க முடிந்த ஒரு படைத்தலைவனின் கதைதான் கடல் புறா! இரண்டாம் பாகத்தில் கடல் புறா என்ற பெயர் கொண்ட ஒரு கப்பலை நிர்மானிப்பான் இளையபல்லவன். அதில் அவன் பொருத்த சொல்லும் இயந்திரங்கள் பாஹுபலிக்கெல்லாம் அப்பன். பல சூட்சமங்களை உள்ளடக்கிய அந்த கப்பலின் தலைவனும் அவனே. அந்த கப்பல்களை வைத்து எதிரிகளை கப்பல் போரில் வெல்லும் போர் காவியம் கடல் புறா!

இன்று சில தமிழ் நாவல்களை ஆன்லைனில் வாங்க பொறுக்கி கொண்டிருந்தபொழுது கிடைத்த ஞாபக குப்பை! கல்கியா? சாண்டில்யன்? என்று விவாதம் எல்லாம் தேவையில்லை. இருவர் எழுத்துகளும் தெறி தூள்!

http://www.amazon.in/Kadal-Pura-3-Parts-Sandilyan/dp/B00IDUQ7XS


No comments:

Post a Comment

ஆண்கள் சமையல் செய்வதிலிருந்து தப்பிப்பது எப்படி?

என்னுடைய வாட்சப் குழு ஒன்றில் என்னைப் போல சமையலறை பக்கம் எட்டிப் பார்க்காத பகுத்தறிவாளர் ஒருவர் எடை போடும் எந்திரம் என்றெண்ணி Induction ஸ்ட...