Monday, May 15, 2017

ஆண்கள் சமையல் செய்வதிலிருந்து தப்பிப்பது எப்படி?

என்னுடைய வாட்சப் குழு ஒன்றில் என்னைப் போல சமையலறை பக்கம் எட்டிப் பார்க்காத பகுத்தறிவாளர் ஒருவர் எடை போடும் எந்திரம் என்றெண்ணி Induction ஸ்டவ் மேல்  ஏறப் போகும் காமெடி ஒன்றை பகிர்ந்திருந்தார் நண்பர். முதலில் பார்த்தபொழுது எடை போடும் எந்திரம் என்றே நம்பினேன். புரிந்தபின் நக்கலாக இது எடை மெஷின் இல்லையா என்று ரொம்பவே அப்பாவியாகக் கேட்க ஷாக் அடித்தது போல ஆனார் நண்பர்.

சரி தலைப்புக்கு வருவோம்! உங்களுக்கு சமையல் தெரிந்தாலும் சரி, தெரியாவிடிலும் சரி எப்படி அடுப்படிக்குள் நுழையாமல் இருப்பது என்று சொல்லித் தருகின்றேன்!


  • ஒன் ஆப் தி பெஸ்ட் சாம்பார் இன் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்று தங்கமணியிடம் சாம்பார் சாப்பிடும் பொழுதெல்லாம்  சொல்லுங்கள்! என்றேனும் அப்படியாக மாற ஆண்டவன் அருள மாட்டாரா என்ன?

  • தப்பி தவறி கூட எங்க அம்மா இதை இப்படி செய்வார், அதை அப்படி செய்வார், இதை நீ இப்படி செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லி தொலைக்காதீர்கள். அதற்கு அப்புறம் பூரி எல்லாம் வராது, காலம் பூரா பூரிக்கட்டைதான்!

  • இதற்கு அப்புறமும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தங்கமணி உங்களை ஏதாவது சமையல் செய்து தருமாறு கேட்க, நீங்களும் கரண்டி பிடித்தீர்களேயானால் தப்பி தவறி கூட சுவை என்ற ஒன்றே இல்லாத மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்.எப்படியும் அப்படிதான் சுவை இல்லாமல் வரும் என்பவர்கள் என் ஜாதி! உதாரணத்திற்கு தோசையை கருக்கி விடவும், சப்பாத்தியை வறட்டி போல சுடவும், காரத்தை அள்ளி கொட்டவும்! இதற்கு அப்புறம் உங்களை சமையல் செய்ய சொல்வார்கள்?

  • இந்த உபாயத்தையும் சரியாக பயன் படுத்த முடியாதவர்கள் அடுத்து செய்ய வேண்டியது தங்கமணிக்கு பிடிக்காத ஐட்டம்கள். பாவக்காய் பொரியல், பீர்க்கங்காய் சொரியல், கருவாடு மசியல் என்று வரிசை கட்டி ஆசையாக செய்து கொடுத்தால் அதற்கு அப்புறம் நிரந்தர ரெஸ்டுதான்!

  • இப்படி நிரந்தர ரெஸ்ட் எடுக்கும் பொழுது அடிக்கடி "நீ பண்ற மாதிரி எனக்கு சுட்டு போட்டாலும் வராது" என்றும் நல்ல காரமாக  செய்த புளி குழம்பையும் இரண்டு லிட்டர் குடித்துவிட்டு "தேன்! தேன்!" என்றும் சொல்லி வைத்தீர்கள் என்றால் வாரம் ஒரு முறை பிரியாணி என்ற வஸ்துவை ருசி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கருட புராணத்தில் சொல்லியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.


அதற்காக அடுப்படிக்குள் எட்டிப் பார்க்காமலே இருந்து விடாதீர்கள். சுடு தண்ணீர் ஓவனில் வைக்கலாம், டிப் டீ போட்டு தரலாம். வீட்டில் ஏதேனும் பார்ட்டி இருந்தால் பெருந்தன்மையாக நான் ஆனியன் ரைத்தா செஞ்சு தர்றேன், மத்ததெல்லாம் நீ பாத்துக்க என்று வேலையை (?) பகிரலாம்.

இப்படியாக நடந்து கொண்டீர்களேயானால் இன்று மட்டும் அல்ல வாழ்க்கையில் எல்லா நாளும் இன்ப நாளே!

பி.கு. பொது நலன் கருதி இன்னும் ஏதேனும் உத்திகள் இருந்தால் பின்னூட்டத்தில் பகிருங்கள்.

Friday, May 5, 2017

கடல் புறா

+2 படிக்கும் காலத்தில் ஒரு அதிகாலை வேளை. நான்கு மணி இருக்கும்.


"தம்பி! எழுந்திருப்பா! இன்னிக்கு பிசிக்ஸ் பரிட்சைன்னு சொன்னியே!"


சோம்பல் முறித்தபடியே கடுப்புடன் எழுந்தேன். பிசிக்ஸ் புத்தகத்தை பார்த்த பொழுதே குமட்டி கொண்டு வந்தது. வேண்டா வெறுப்பாக பிரித்தேன். ஒரு பக்கத்தை படிப்பதற்குள் ஒரு மாமாங்க நேரம் ஆனது போல தோன்றியது. வெறியின் உச்சத்தில் இருக்கையில் கண்ணில் நேற்று படித்து பாதி வைத்திருந்த ஒரு புத்தகம் அலமாரியில் துருத்தி கொண்டு தெரிந்தது.


எடுத்தேன், படித்தேன், அடுத்த மூன்று மணி நேரத்தில் ஐநூறு பக்கங்கள் கொண்ட "கடல் புறா" நாவலின் இரண்டாம் பாகத்தை முடித்தேன்! அன்று பரிட்சையில் 150 -க்கு 17. என் அப்பாவும் அம்மாவும் அதற்கு அடுத்த இரண்டு வாரங்கள் பள்ளிக்கு நடையாய் நடந்தது, டீ.சி கொடுப்பதிலிருந்து தப்பியது எல்லாம் இன்னொரு நாவலுக்கான சுவாரஸ்யங்கள்.


பாய்ண்டுக்கு வருவோம்! எழுத்தாளர் சாண்டில்யனின் மாஸ்டர் பீஸ் என்று கடல் புறாவைதான் சொல்வேன். பாஹுபலி என்ன பாஹுபலி, இளையபல்லவனின் ஹீரோயிசத்திற்கு முன்னர் பாஹுபலி எல்லாம் ஜுஜுபி. இத்தனை ஆண்டுகள் ஆனபின்னரும் இளையபல்லவனும், அநபாயச் சோழனும், காஞ்சனா தேவியும், மஞ்சள் அழகியும், அகூதாவும், அமீர் பாத்திரங்களும் நினைத்த மாத்திரத்தில் வந்து மறைவது என் ஞாபக சக்தியின் வெற்றி அல்ல, அந்த கதாபாத்திரங்களை படைத்த சாண்டில்யனின் வெற்றி.




கடல் புறா ஒரு சரித்திர காவியம்.சோழர்கள் வாணிபம் பொருட்டு கடல் கடந்து கடாரம் வரை ( இன்றைய மலேஷியா ) தங்கள் புலிக்கொடியை பறக்க விட்டிருந்த காலம். அதை சாத்தியமாக்க முடிந்த ஒரு படைத்தலைவனின் கதைதான் கடல் புறா! இரண்டாம் பாகத்தில் கடல் புறா என்ற பெயர் கொண்ட ஒரு கப்பலை நிர்மானிப்பான் இளையபல்லவன். அதில் அவன் பொருத்த சொல்லும் இயந்திரங்கள் பாஹுபலிக்கெல்லாம் அப்பன். பல சூட்சமங்களை உள்ளடக்கிய அந்த கப்பலின் தலைவனும் அவனே. அந்த கப்பல்களை வைத்து எதிரிகளை கப்பல் போரில் வெல்லும் போர் காவியம் கடல் புறா!

இன்று சில தமிழ் நாவல்களை ஆன்லைனில் வாங்க பொறுக்கி கொண்டிருந்தபொழுது கிடைத்த ஞாபக குப்பை! கல்கியா? சாண்டில்யன்? என்று விவாதம் எல்லாம் தேவையில்லை. இருவர் எழுத்துகளும் தெறி தூள்!

http://www.amazon.in/Kadal-Pura-3-Parts-Sandilyan/dp/B00IDUQ7XS


Wednesday, April 26, 2017

ரகு தாத்தா!


என்னுடைய பன்மொழி பேசும் வாட்ஸப் குழு ஒன்றில் இந்தி பேசும் நண்பர் சடாரென்று இந்தியில் இன்று ஒரு குறுஞ்செய்தியை தட்டியிருந்தார்.


என்னடா இது! தமிழனுக்கு வந்த சோதனை என்று நினைக்கும்போதே என்னுடைய வீர சைவ தமிழ் நண்பர் "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா" என்று மறுமொழி கொடுக்க ஒரு ஜாலியன்வாலாபாக் ஆரம்பமானது.


மோடி நம்முடைய குழுவிலும் பின்னிருந்து இயக்க ஆரம்பித்து விட்டாரோ, இந்தி திணிப்பை ஆள் வைத்து செய்கின்றாரோ என்ற எண்ணம் ஒரு வினாடி தோன்றி மறைந்ததை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.


நிற்க! என் வாழ்க்கையின் கடந்த பக்கங்களை கொஞ்சம் புரட்டி பார்த்தால் அக்மார்க் தமிழனுக்குரிய அனைத்து குணாதிசயங்களை கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். மூன்றாம் வகுப்பில் இருந்து இந்தியை மூன்றாம் மொழியாக நான் படித்த பள்ளிகளில் முங்கி முங்கி பயின்றிருந்தாலும் "தோடா! தோடா!" க்கு மேல் சத்தியமாக ஒரு வார்த்தையும் ஞாபகத்தில் இல்லை.


இதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல +1 , +2 வில் சமஸ்க்ருதம் வேறு லைட்டாக ஸ்லோகம் மூலமாக பரிச்சயம். ஆதித்யம் ஹ்ருதயம் ஸ்லோகம் எல்லாம் ஒரு காலத்தில் நுனி நாக்கில்!


பள்ளி சூழலிலும் நிறைய ராஜஸ்தானி நண்பர்கள். இந்தி மழையில் நிறைய நனைய வேண்டியிருந்தாலும் தாமரை இலை தண்ணீராய் இந்தியை தலைக்கு ஏற்றாமல் இருந்த சிலரில் நானும் ஒருவன். அவர்கள் கொண்டு வரும் சப்பாத்தியும் கடுகு எண்ணையில் தாளித்த ஊறுகாயும் வாயில் ஏறிய அளவு இந்தி மூளையில் ஏறவே இல்லை. அதற்காக இந்தி எதிர்ப்பாளன் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டியதில்லை. இந்தி வரவில்லை அவ்வளவே!, ஆங்கிலமே நமக்கு ததுங்கினத்தோம் போடும்பொழுது இந்தி எல்லாம் எம்மாத்திரம்!


தொலைக்காட்சியில் ராமாயணம், மஹாபாரதம் போன்ற சீரியல்கள் வரும்போது எல்லாம் "பரந்தூ" என்ற வார்த்தை எத்தனை வாட்டி வரும் என்றும் "இந்தூ" எத்தனை வாட்டி வரும் பெட் கட்டி விளையாடியது மட்டும் நினைவில் இருக்கிறது.


கல்லூரி வரை தியேட்டர் சென்று பார்த்த இந்தி படங்கள் இரண்டே இரண்டு. ஒன்று கஜோலுக்காக "தில்வாலே துல்ஹனியா லே ஜெயங்கே" மற்றொன்று ஊர்மிலாவுக்காக "ரங்கீலா". என்ன பார்த்திருப்போம் என்பதை உங்கள் திறனுக்கு ஏற்ப கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று விட்டுவிடுகிறேன்.


பெங்களூர் வந்து திருமணம் எல்லாம் முடிந்து தியேட்டர் சென்று பார்த்த இந்தி படம் FANA. தங்கமணியை வரிக்கு வரி தொணத்தி எடுத்ததில் இனிமேல் இந்த ஆணியே டேஷ் வேண்டாம் என்று முடிவெடுக்க அதுவே தியேட்டர் சென்று பார்த்த கடைசி இந்தி படமாகி விட்டது என்பதை வரலாற்றில் வருத்தமுடன் எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன்.


ஆக, இந்த மாதிரி எருமை மாட்டின் மேல் மழை பெய்த மாதிரி கனத்த தோலுடன் இந்தியை எதிர் கொண்டால் இந்தி திணிப்பவர்கள் அவர்களாகவே சோர்ந்து போய் "இது பூட்ட கேஸ்!" என்று அமைதி ஆகி விடுவார்கள். ரொம்ப மெனக்கெட்டு இந்தி எதிர்ப்பை எல்லாம் காண்பிக்க வேண்டியதில்லை!


விருப்பம் இருப்பவர்கள் படியுங்கள், விருப்பம் இல்லாதவர்கள் வேலை நிமித்தமாக தேவையெனில் படித்து தொலையுங்கள் இல்லை என்னை மாதிரி ஜாலியாக இருங்கள். அதே சமயம் மும்மொழி கொள்கை என்ற ஒன்றை எல்லாம் யாராவது நினைத்து எல்லாம் பார்த்தால் கூடவாஞ்சேரிக்கு மேல் "பப்பு" வேகாது என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

திரும்பவும் சொல்கிறேன்..."ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா"!!!

Thursday, April 13, 2017

ஹேவிளம்பி!

எனக்கெல்லாம் குழப்பமில்லை. தையா? சித்திரையா? என்பதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை. பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தானே! இனிப்பை எடுங்கள், கொண்டாடுங்கள்!

என்ன உள்ளேதான் சற்று இடிக்கின்றது! நம்ம ஊரு நிலவரம் சற்று கலவரமாக இருப்பது நிறையவே வருத்தம்தான். கரகாட்டக்காரன் காமடி போல நம்ம தமிழ் நாட்டு சுந்தரியை யார் வைத்திருக்கின்றார்கள் என்றே பிடிபடவில்லை.


12-ஆம் தேதி தேர்தல் நடந்திருந்தால் சனிக்கிழமை ஒரு பரபர IPL கிளைமாக்ஸ் பார்த்திருக்கிலாம். சீக்கிரம் ஆட்டை கலைந்திருக்கும். தேவையற்ற காத்திருத்தல்!


டெல்லி விவசாயிகள் போராட்டம் இன்றோடு முப்பதாம் நாள்!  நியாயம் எதுவாக இருப்பினும் உச்சத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனிக்க கூடாதா? ஈகோ பார்க்கும் தருணமல்ல!


நாளொரு போராட்டம் பொழுதொரு மறியல் என்று வாழ்க்கை எக்கு தப்பாகத் தான் போய்க் கொண்டிருக்கின்றது. இந்த நிலைமை சரியான ஒரு தலைமையின் வெற்றிடத்தையே காண்பிக்கிறது. யார் அதை நிரப்ப போகின்றார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.


எது எப்படி இருப்பினும் திருவாளர் தமிழகத்தான் ஆகிய நாம் நம்பிக்கையாய் இந்த புது வருடத்தை எதிர்கொள்வோம். நம்பிக்கைதானே  வாழ்க்கை!


அனைவருக்கும் இனிய ஹேவிளம்பி தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Sunday, April 9, 2017

அங்காடித் தெரு!

ரகளைபுரம்! கலவர பூமி!

இப்படி எல்லாம் ஆரம்பித்தால்தான் படிப்பேனாக்கும் ஆட்கள் இருப்பதால் இப்படி ஒரு தொடக்கம்! உங்கள் வீட்டைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைத்துவிட்டோம் என்று நீங்கள் பகடி செய்தாலும் கவலையில்லை!

சென்னையில் எங்கள் வீடு இருக்கும் தீ.நகரைப் பற்றிதான் இந்த முன்னுரை. மாட்லி சாலைக்கும் நடேசன் தெருவிற்கும் நடுவில் உள்ளது எங்கள் தெரு. இப்படி சொன்னால் உங்களுக்கு சட்டென்று புரியாது. ரங்கநாதன் தெரு எங்கள் தெருவிலிருந்து இரண்டு தெரு தள்ளி என்று சொன்னால் 'அட' என்பீர்கள்!

எங்கள் தெரு ஒரு "முட்டுச் சந்து" வேறு. அப்பொழுது எங்கள் தெருவில் உள்ளவர்கள் மட்டுமே வருவார்கள் என்று நினைத்தால் அதுதான் இல்லை! தீபாவளி அல்லது பொங்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்னேரே தலைவலி ஆரம்பித்துவிடும். காலை ஒன்பது மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தால் தி.நகர் ஷாப்பிங் வரும் மக்கள் தெருவின் இரண்டு பக்கமும் இருசக்கர வாகனங்களை போட்டு விட்டு சென்று விடுவார்கள். நான்கு வண்டி எங்கள் கேட்டின் முன்னேயே நிற்கும். அடே! உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா என்று நம்மை நாமே நொந்துகொண்டு அக்கறையாக அவர்கள் வண்டியை அலேக்காக பொறுமையாக இடம் மாற்றி வைத்து விட்டு நம் வண்டியை வெளியே எடுக்க வேண்டும். கொஞ்சம் வருடம் முன்னர் எங்கள் தெருவுக்கு தனி வாச்மேன் போட்டு கேட் எல்லாம் போட்டது தனிக்கதை!

எங்கள் தெரு மட்டுமல்ல உஸ்மான் ரோட்டை ஒட்டி உள்ள அனைத்து தெருக்களிலும் இதுதான் பிரச்னை. மனிதர்கள் நிற்பதற்கே இடமில்லாத இடத்தில் உள்ள ஷாப்பிங் "மெக்கா"வில்   வண்டியை பார்க் செய்வதற்கு இடம் கிடைத்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள், நாங்கள்?

சென்னையில் உள்ள மக்களெல்லாம் வண்டி கட்டி ஷாப்பிங் வரும் எங்கள் ஊருக்கு நாங்கள் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்றால் "நடராஜா" சர்வீஸ்த்தான். ரொம்ப தூரமில்லை. கில்ட் தெருவில் இரண்டு எட்டு வைத்து நடேசன் தெருவில் உள்ள ஒரு குறுகிய சந்தைப் பிடித்தால் ரங்கநாதன் தெருவின் நடுவில் நிற்போம். அதற்கு பிறகு நடக்க எல்லாம் வேண்டியதில்லை மக்களே நம்மை முன்னேயும் பின்னேயும் நகர்த்தி செல்வர். பாசக்காரர்கள்!

தி.நகர் ஷாப்பிங் உலகின் தலையாய தெரு ரங்கநாதன் தெரு. அப்பா அம்மா தவிர்த்து எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாக விற்று கொண்டிருப்பார்கள். ஆல் க்ளாஸ் மக்களையும் திருப்தி படுத்த முடியுமா என்று யாரவது ரூம்  போட்டு யோசனை செய்து கொண்டிருந்தால் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ரங்கநாதன் தெருவிற்கு டிக்கெட் எடுங்கள்!


லட்சங்களில் நகையும் கிடைக்கும், நூறு ரூபாய்களில் இமிடேஷன் வகைகளும் கிடைக்கும். இந்த உதாரணம் புடவைக்கும், செருப்புக்கும், பாத்திரங்கள் என அனைத்துக்கும் பொருந்தும். சல்லீசான விலையில் சமோசா, பாப் கார்ன், கரும்பு ஜூஸ்! அம்மா உணவகம் வருவதற்கு முன்னரே சரவணா ஸ்டோர்ஸ்-இன் மலிவுவிலை உணவகம் ஒரு வழிகாட்டி என்றே சொல்லலாம்.

ஷாப்பிங் மால்கள் கற்கவேண்டிய வியாபார பாடங்கள் இந்த அங்காடித் தெருவில் நிறைய இருக்கிறது. ஷாப்பிங் போலாமா?

Tuesday, April 4, 2017

சாரி சொல்லு!

"எங்க வெச்சேன்..." 

ரதி குழம்பினாள். கார் சாவியக் காணோம்! கைப் பையில் துழாவினாள். இல்லை!

"என்னங்க! என்னோட கார் சாவிய எங்க வெச்சேன்னு பாத்தீங்களா?"

"ஆமா! ஆபீஸ் விட்டு வந்தவுடனே சாவிய விட்டு தூக்கி அடி! ஒரு இடத்தில வைக்காத!" என்று கத்திக்கொண்டே கராஜில் இருந்த தன் காரை கிளப்பினான் ரமேஷ். ரதிக்கு வெறுப்பாய்  வந்தது.

எட்டு மணிக்கு ஸ்கூல் பஸ் வந்துவிடும். பெரிய குட்டி ராமை ஸ்கூல் பஸ்ஸில் விட்டுவிட்டு சின்ன குட்டி ரம்யாவை டே கேரில் விடவேண்டும். இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கிறது. 

"டே ராம்! அம்மா கார் சாவிய பாத்தியாடா?" என்ற ரதியை இட்லியை வாயால் வைத்துக் கொண்டே இடம் வலமாய் தலையை ஆட்டினான் ராம். எரிச்சல் அதிகமாகி கொண்டே போனது! 

"அது என்ன கசப்பு மாத்திரையா? ஏன் வாய்லயே வச்சிருக்கே?" என்று தன்னுடைய கையாலாகதத்தனத்தை அவனிடம் காட்டினாள். ராம் முகம் சுண்டியது.

ரம்யாவின் பொம்மை கூடையில் உள்ளே விழுந்துவிட்டதோ?.கூடையை மொத்தமாக கவிழ்த்தாள். பரபரவென்று தேடினாள். இல்லை. வந்த கோபத்தில் கைக்கு வந்த யானை பொம்மையை ஓங்கி சுவற்றில் அடித்தாள். யானை மூளியானது.


விளையாடி கொண்டிருந்த நான்கு வயது ரம்யா இதைப் பார்த்ததும் முகம் சுருங்கினாள். அழப் போன அவள் அழுகையை கோபமாக மாற்றி மழலையில் சொன்னாள் "மம்மி! சே சாரி டு தி எலிபன்ட் பர்ஸ்ட்!"

தூக்கி வாரி போட்டது ரதிக்கு. சே! என்ன ஒரு மடத்தனம்.

"அடி கண்ணே! மன்னிச்சுக்கோடி என் ராசாத்தி!"

Monday, April 3, 2017

சின்னப்பொண்ணு!

சில நேரத்தில் ஒரு பெயரின் காரணம் ஏன் எப்படி எவ்வாறு ஏற்பட்டது என்று ஆராய்ந்தோமானால் நாம் நம்முடைய “முடி” துறக்க வேண்டியிருக்கும்.

உதாரணத்திற்கு பஜ்ஜிக்கு பஜ்ஜி என்று ஏன் பேர் வந்தது என்று நாம் என்றாவது யோசித்து இருக்கிறோமா? பஜ்ஜி என்றவுடன் நாக்கு நம் மூளையின் உத்தரவின்றி நான்கு முழத்திற்கு இந்நேரம் நீட்டியிருக்கும். சரி! புள்ளிக்கு வருவோம். பாய்ண்டுக்கு வருவோம் என்பதைத்தான் கொஞ்சம் தமிழ் படுத்தினேன். உங்களை ரொம்பவே படுத்துகிறேன் என்பது புரிகின்றது!

"மது! அந்த  செருப்பை போட்டுக்கிட்டு சின்னப்பொண்ணுக்கிட்ட நாலு இலை வாங்கிட்டு வாய்யா!!" - என்று தாத்தா வழக்கமாக இப்படித்தான் என்னை ஏவுவார்.

"ஏன்பா! இலை வாங்கிட்டு வான்னு சொன்னா பத்தாதா? எதுக்கு கூடவே அந்த செருப்பை போடற விஷயத்தையும் சொல்றீங்க?" என்று என் மாமா தாத்தாவை சத்தாய்க்க  பொடியனாய் இருந்த நான் செருப்பை மாட்டுவேன்.

என் தாத்தாவின் வீடு (திருச்சி மெயின் கார்ட்கேட்) ஜபார்ஷா தெருவில் அங்கு விலாஸ் மளிகைக்கு பக்கத்தில் உள்ள குஜிலி தெருவில் இருந்தது. உடனே நீங்கள் குஜாலாக வேண்டாம். நிஜமாலுமே குஜிலி தெருதான். பெயர் காரணம் கூகிளாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த தெருவின் மறுமுனையில் உள்ள ஒரு வீட்டின் திண்ணைதான் சின்னப்பொண்ணு வழக்கமாக அமரும் இடம். அந்த வீடு பல அடுக்குகளாக இருக்கும். மழை பெய்தால் முதல் அடுக்கில் அமர்வார்.


சின்னப்பொண்ணு என்றவுடன் ஒரு சின்னப்பொண்ணை நீங்கள் எதிர்பார்த்தீர்கள் என்றால் நீங்கள் ஐய்யோ பாவம். ஐம்பது வயதொத்த நெடுநெடுவென உயரமுள்ள ஒல்லியும் இல்லாத குண்டும் இல்லாத அக்மார்க் கிராமத்துப் பெண்மணி.

கற்பனை ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தேனென்றால் அங்கேதான் போய் நிற்பேன். கடை என்று அறியப்பட்ட இடத்தை சுற்றி இலைக் கட்டுகளாக இருக்கும். இலையை நறுக்கி கொண்டிருப்பார் புகையிலையை போட்டுக்கொண்டு.

"சின்னப்பொண்ணு! தாத்தா நாலு இலை வாங்கி வர சொன்னார்!" - எனக்கும் சின்னபொண்ணுதான். அப்போதுதான் பிறந்த குஞ்சு குளுவான்களுக்கும் அவர் சின்னப்பொண்ணுதான்.

"யாரு? அங்கு விலாஸ் காரர் பேரனா?" என்று முகமலர்ந்து பேசுவார். எல்லாம் நுனி இலை! ஒரு ஏடு இலை கூட வைக்க மாட்டார். பார்த்து பார்த்து ஆசையாய் கட்டி கொடுப்பார்.

“போய்யா ராசா! காச தாத்தாகிட்ட வாங்கிக்கிறேன்!”.

என் தாத்தா மளிகை கடை வைத்திருந்ததால் இந்த மாதிரி முக்கால் வாசி பேரிடம் பணம் கொடுத்து எதையும் வாங்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் மளிகை கடையில் சாமான் வாங்கும் போது கணக்கு சொல்லி கழித்து விடுவார்கள்.

சின்னப்பொண்ணு என்பது அவர் சிறுவயதாக இருக்கும் போதே கூப்பிட ஆரம்பித்து அப்பெயரே நிலைத்து விட்டதோ இல்லை உண்மைப் பெயரே சின்னபொண்ணுதானோ என்பது அந்த ஸ்ரீரங்கநாதனுக்கே வெளிச்சம்!

ஆண்கள் சமையல் செய்வதிலிருந்து தப்பிப்பது எப்படி?

என்னுடைய வாட்சப் குழு ஒன்றில் என்னைப் போல சமையலறை பக்கம் எட்டிப் பார்க்காத பகுத்தறிவாளர் ஒருவர் எடை போடும் எந்திரம் என்றெண்ணி Induction ஸ்ட...