Sunday, March 26, 2017

உப்புமா ! ஆ! ஆ! ஆ!

"ஒன்பதுலயும் சனி உச்சம் பெற்ற ஒருவருக்குத்தான் 
கோயிலுக்கு போனாலும் பிரசாதமாக 
உப்புமாவை கடவுள் தருவார்"
என்ற மீம்ஸை படித்தபோது "ஆ! என்னடா உப்புமாவாவுக்கு வந்த சோதனை" என்றே தோன்றியது. நம்மைப் போன்ற உப்புமா பதிவர்களுக்கு அந்த பெயர் வர காரணம் ஆன இந்த சிற்றுண்டியை நாம் சப்போர்ட் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்?

யுவர் ஹானர்!
  • ரெடி டு ஈட் உணவுவகைகள் வருவதற்கு முன்னரே இந்தியன் இன்னும் சொல்லப் போனால் தமிழன் கண்டுபிடித்த உன்னத உணவு உப்புமா.
  • பொங்கல் போன்று ஸ்லீப்பிங் பில் ஆக எல்லாம் இது வேலை செய்து நம்மை மாட்டி விடாது.
  • சமையல் தெரியாத பெண்களுக்கும் பேச்சிலர் மற்றும் பேச்சு இலர் (நம்மள சொன்னேன்) ஆக இருக்கும் ஆண்களுக்கும் ஆபத்பாந்தவன்.
  • இட்லி சப்பாத்தி பரோட்டா போன்று பலத்த processing எல்லாம் தேவை இல்லை. வாணலி, தண்ணி, ரவை இந்த மூன்றும் தான் மெயின் காம்போனென்ட். சமையல் செய்பவர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்ப மானே தேனே என்று வேண்டியதை போட்டு கொள்ள வேண்டியதுதான்.
  • ரவா உப்புமா, அவல் உப்புமா, சேமியா உப்புமா, கிச்சடி, காராபாத் என்ற பல வெரைட்டிகள் இருக்கும் போதே உங்களுக்கு தெரியவில்லை நம் உப்புமா சிங் இஸ் கிங் என்று!
  • எப்படி நல்ல பிள்ளை வளர்ப்புக்கு பெற்றோர்கள் காரணமோ அது போலத்தான் நல்ல உப்புமாவுக்கு தேர்ந்த சமையல் வல்லுநர் தேவை(நான் அவனில்லை!). தயவு செய்து உப்புமா மேல் பழியை போடாதீர்கள்!
இன்னும் உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் பெங்களூரு வாருங்கள். அனைத்து தர்ஷனி மற்றும் திண்டிகளெல்லாம் "நம்கே காராபாத் கொடி" என்று அவர்கள் கொடி பிடிப்பதை.

தட்ஸ் ஆல் யுவர் ஹானர்!

இப்பொழுது தான் நம் தங்கமணி மாவு முடிந்து விட்டது நாளை உப்புமாதான் என்று மெனு சொல்லி கொண்டிருந்தார். நாளை நம்முடைய பதிவை நானே படித்து மனதை தேற்றி கொள்ள வேண்டியதுதான்!

Wednesday, March 22, 2017

மலை நகரம் - 1

தொபுக்கட்டீர்!
ஒவ்வொரு முறை ரயில் திருச்சி காவேரியை கடக்கும் போதும் இந்த சத்தம் தான் மனதினுள் வந்து போகும்.
தொபுக்கட்டீர்!
நான் சிறு வயதில் பார்த்திருக்கின்றேன். ஆடி மாதம் காவேரி பெருக்கெடுத்தோடும்போது ஸ்ரீரங்கத்தில் ரயிலேறி தடக் தடக் என ரயில் காவேரியை கடக்கையில் தொபுக்கட்டீர் என இளைஞர்கள் குதிப்பதை.
உங்கள் சொந்த ஊர் எது என்று கேட்டால் என்னவென்று சொல்வீர்கள்? உங்கள் அப்பாவின் ஊரா? நீங்கள் வளர்ந்த ஊரா? அப்பாவின் பூர்வீகம் மதுரை என்றாலும் அம்மாவின் ஊரான, நான் பிறந்த ஊரான திருச்சியையே நான் சொந்தம் கொண்டாடுவேன். காவேரி தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்று பெருமை பேசுவேன்.
காவேரி தாகம் தனிப்பவள் மட்டும் அல்ல, தாய்ப் பால் கொடுப்பவள். காவேரி ஒரு உணர்வு. சிறு வயதில் ஒவ்வொரு முறை கோடை விடுமுறைக்கு திருச்சி சென்றாலும் அம்மா மண்டபத்தில் குளிக்க தவறியதில்லை. ஸ்ரீரங்கநாதனை தரிசிக்க மறந்ததில்லை. காவேரியில் தண்ணீர் இல்லாவிடில் மனம் சூம்பி விடும். ஆடி 18 அன்று ஆற்றில் நீர் ஓடவில்லையென்றால் மனம் பதைபதைக்கும்.
மேகதாதுவில் இன்னொரு அணை என்ற சேதி கேட்கும் பொழுதே ஆற்றொணா துயரம் கொள்வதை தடுக்க முடியவில்லை. அடுத்த ஜல்லிக்கட்டு காவேரிக்குதான்!
நடந்தாய் வாழி காவேரி!
தொடரும்...

Monday, March 20, 2017

கண்ணம்மாப் பேட்டை - 2

“பெரியோர்களே...! தாய்மார்களே...!”


1980 - களில் அடிக்கடி  இந்த மாதிரி குரல்கள் ஒலிக்காவிடில் அது கண்ணம்மாப் பேட்டை கிடையாது!


முத்துரங்கன் சாலையில் மேட்லி முதல் தெருவுக்கு அருகாமையிலோ அல்லது மேட்லி சாலையிலோதான் மேடை அமைக்கப்படும். பகல் 12 மணியளவில் மேடை அமைப்பதற்கான அனைத்து சாமக்கிரியைகளும் வந்திறங்கும். சாலையில் பள்ளம் தோண்டி கம்பம் நட்டு மேடைக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் ஜோராக இருக்க சாலையின் இருபுறமும் ட்யூப் லைட்டுக்கான கம்பங்களும் ஒலிப்பெருக்கிகளுக்கான கம்பங்களும் நடப்பட்டு அவையும் ஆயத்தமாகும். இவற்றுக்கான மின்சாரம் திருடப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!


மாலை நான்கு மணியளவில் "நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேறும்..." என்று M.G.R. பாடல்களோ அல்லது "ஓடி வருகிறான்.உதயசூரியன்" என்று நாகூர் ஹனிபாவின் பாடல்களோ கட்சிகளுக்கேற்ப காதை பிளக்கும். கட்சி மீட்டிங்கிற்கு ஒரு வாரம் முன்னதாகவே புரட்சி புயல் வருகின்றார்! இளைய சூறாவளி வருகின்றார்!  என்ற மாதிரி போஸ்டர்கள் தூள் பறக்கும்.


ஆறு மணிவாக்கில் வட்டம், ஒன்றியம் என்று ஒவ்வொருவராக அவரவர் திறமைக்கேற்ப எதிர் கட்சிகளை கிழிகிழியென்று கிழித்து தோரணம் தொங்க விடுவார்கள். வீட்டிலிருந்தே இத்தனையும் கேட்க முடியும். பேரானந்தம் போங்கோள்!


படபடவென்று பட்டாசு சத்தம் கேட்டால் ஸ்டார் பேச்சாளர் வந்து விட்டார் என்று அர்த்தம். அவர் உடனே மைக் பிடிக்க மாட்டார். உதிரி பேச்சாளர்கள் ஒரு நான்கைந்து பேர் தியாகச் செம்மல், கலங்கரை விளக்கம் என்று பல் கூட விளக்காமல் புகழ் மாலை, கவிதை, அந்தாதி, இத்யாதி இத்யாதி வாசிப்பர். இத்தனையும் கேட்டு விட்டு பல்லிளிக்க கடைசியாக மைக் பிடிப்பார் ஸ்டார் பேச்சாளர்.


“இப்படித்தான் கிரேக்கத்திலே! (அ) மாஸ்க்கோவிலே!” என்று பேச்சை ஆரம்பித்தார் என்றால் பாதி ஐரோப்பாவையும் சீனத்தையும் ஒரு கால் மணி நேரம் சுற்றி விட்டு தமிழ் நாட்டுக்கு வந்து நம் தாவு தீரும் வரை நொங்கெடுப்பார். உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன், உங்கள் சுண்டு விரலை தொட்டு கேட்கிறேன் என்று பார்ட் பார்ட்டாக உங்கள் பாகங்களை படம் வரைந்து பல கோரிக்கைகள் வைக்கைப்படவில்லையென்றால் அன்று சூரியன் மேற்கில் உதித்தாக அர்த்தம்!


பேச்சினூடே 127 -வது வட்டத்தின் சார்பாக அண்ணன் சை.கோ அவர்கள் இந்த பொன்னாடையை போர்த்துவாரென்று வகையில் சில பல பொன்னாடைகள் சார்த்தப்பட்டும் அவையே பற்றாக்குறையாக இருந்தால் recycling -ம் செய்யப்படும்.


எப்படி இவையெல்லாம் பசு மரத்தாணி போல ஞாபகம் இருக்கிறது என்றால் டீ.வீ. சேனல்கள் வருவதற்கு முன்னர் இந்த மீட்டிங்குகள்தான் எங்கள் பேட்டை வாசிகளின் பொழுதுபோக்கின் உச்சக்கட்டம். பொடியனான என்னையும் என் அப்பா அழைத்து கொண்டு போவார். எங்கள் வீட்டிலிருந்து நடை தூரம்தான். சாலையில்தான் அமர வேண்டும். செருப்பு அல்லது துண்டுதான் இருக்கை. பட்டாணி அல்லது வேர்க்கடலை, இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று அமைந்தால் செம காம்போ.


இப்படியாகத்தான் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, தீப்பொறி ஆறுமுகம், நன்னிலம் நடராசன் என்று தமிழ் கூறும் நல்லோர்கள்(?) பலர் எனக்கு அறிமுகம் ஆனார்கள். இதில் மேடையேறி காளிமுத்து அவர்களுக்கு கையெல்லாம் கொடுத்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.


"கருவாடு மீனாகாது!
கறந்த பால் மாடி புகாது!"  
என்ற இந்த சூப்பர் வசனங்கள் எல்லாம் காளிமுத்து அவர்கள் கூற நேரில் கேட்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றவன் என்பதை இங்கே மிகப் பணிவன்புடன் சொல்லிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்! பட்டுள்ளேன்! என்று கூறிக்கொண்டு உங்களிடிமிருந்து (எழுதி அடித்து திருத்தி திரும்ப எழுதி...கை வலிப்பதால்)விடை பெறுகின்றேன்! நன்றி ! வணக்கம்!


இன்னும் தொடரும்…


#TNAGAR
#தியாகராயநகர்

ஸ்டார்ட் மியூசிக்!

ஏன்?

ஏன் இப்ப எல்லாம் எழுதறது இல்லன்னு யாராவது கேப்பாங்கன்னு பார்த்தேன்? 

யாரும் கேக்கறதா காணோம்!. 

அப்ப வந்துச்சு பாருங்க ஒரு ஆத்திரம்!, இன்னும் இந்த பய புள்ளைங்கள நம்பினா வேலைக்காவதுன்னு ஆரம்பிடா கைப்புள்ளன்னு களம் இறங்கியாச்சு!. பாருங்க மக்களே, பேச்சு பேச்சாத்தான் இருக்கணும், ஆட்டோவெல்லாம் அனுப்ப கூடாது. 



ஸ்டார்ட் மியூசிக்!😀😀😀.

கண்ணம்மாப் பேட்டை - 1

"உங்க வீடு எங்க?"
"தி.நகர்ல வரதராஜன் தெரு!"
"அது எங்க இருக்கு?"
"முத்துரங்கன் ரோட்ல இருந்து மூணாவது தெரு!"
"முத்துரங்கன் ரோடா?"
"ஆமா! தி.நகர் போலீஸ் ஸ்டேஷன் இருக்கில்ல, அதுக்கு பின்னால போலீஸ் குவாட்டர்ஸ், அத தாண்டினா ஹவுசிங் போர்டு, அதுக்கு ஆப்போசிட் ரோடு!"
மிக கவனமாக தவிர்த்தேன், நண்பன் வீட்டுக்கு வருவதை அல்ல! ஆனாலும் பிடித்து விட்டான்!
"அட, கண்ணம்மா பேட்டைன்னு சொல்லு!"
சொல்ல போனால் எனக்கு தயக்கம் ஒன்றுமில்லை. ஆனால் அதை வைத்து பல பகடிகள் பின்னாலும் முன்னாலும் பேசப்படும்.
"என்னா! வூட்ல சொல்லிக்கினு வந்திட்டியா! நேரா கண்ணம்மா பேட்டைதான்! போ! போ!" என்ற சொலவடையை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கேட்டிராவிட்டால் நீங்கள் சென்னை வாசியல்ல!
ஸ்டாப்! இந்த பதிவு உலகப் பிரபலமான மயானத்தை பற்றியல்ல! தி.நகருக்குளே இருக்கும் ஒரு தீ நகரத்தைப் பற்றி!
பாடல் பெற்றிருக்கக் கூடிய ஸ்தலம். டைரக்டர் Shankar ஜென்டில் மேன் செய்வதற்கு முன்னர் இங்குதான் இருந்தார் என்று கேள்வி. ஆனால் எப்படி காதலனில் வரும் பேட்டை ராப் சாங்கில் நம்ம பேட்டையை மிஸ் செய்தார் என்று தெரியவில்லை!
இன்னும் தொடரும்...

ஆண்கள் சமையல் செய்வதிலிருந்து தப்பிப்பது எப்படி?

என்னுடைய வாட்சப் குழு ஒன்றில் என்னைப் போல சமையலறை பக்கம் எட்டிப் பார்க்காத பகுத்தறிவாளர் ஒருவர் எடை போடும் எந்திரம் என்றெண்ணி Induction ஸ்ட...