Wednesday, April 26, 2017

ரகு தாத்தா!


என்னுடைய பன்மொழி பேசும் வாட்ஸப் குழு ஒன்றில் இந்தி பேசும் நண்பர் சடாரென்று இந்தியில் இன்று ஒரு குறுஞ்செய்தியை தட்டியிருந்தார்.


என்னடா இது! தமிழனுக்கு வந்த சோதனை என்று நினைக்கும்போதே என்னுடைய வீர சைவ தமிழ் நண்பர் "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா" என்று மறுமொழி கொடுக்க ஒரு ஜாலியன்வாலாபாக் ஆரம்பமானது.


மோடி நம்முடைய குழுவிலும் பின்னிருந்து இயக்க ஆரம்பித்து விட்டாரோ, இந்தி திணிப்பை ஆள் வைத்து செய்கின்றாரோ என்ற எண்ணம் ஒரு வினாடி தோன்றி மறைந்ததை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.


நிற்க! என் வாழ்க்கையின் கடந்த பக்கங்களை கொஞ்சம் புரட்டி பார்த்தால் அக்மார்க் தமிழனுக்குரிய அனைத்து குணாதிசயங்களை கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். மூன்றாம் வகுப்பில் இருந்து இந்தியை மூன்றாம் மொழியாக நான் படித்த பள்ளிகளில் முங்கி முங்கி பயின்றிருந்தாலும் "தோடா! தோடா!" க்கு மேல் சத்தியமாக ஒரு வார்த்தையும் ஞாபகத்தில் இல்லை.


இதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல +1 , +2 வில் சமஸ்க்ருதம் வேறு லைட்டாக ஸ்லோகம் மூலமாக பரிச்சயம். ஆதித்யம் ஹ்ருதயம் ஸ்லோகம் எல்லாம் ஒரு காலத்தில் நுனி நாக்கில்!


பள்ளி சூழலிலும் நிறைய ராஜஸ்தானி நண்பர்கள். இந்தி மழையில் நிறைய நனைய வேண்டியிருந்தாலும் தாமரை இலை தண்ணீராய் இந்தியை தலைக்கு ஏற்றாமல் இருந்த சிலரில் நானும் ஒருவன். அவர்கள் கொண்டு வரும் சப்பாத்தியும் கடுகு எண்ணையில் தாளித்த ஊறுகாயும் வாயில் ஏறிய அளவு இந்தி மூளையில் ஏறவே இல்லை. அதற்காக இந்தி எதிர்ப்பாளன் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டியதில்லை. இந்தி வரவில்லை அவ்வளவே!, ஆங்கிலமே நமக்கு ததுங்கினத்தோம் போடும்பொழுது இந்தி எல்லாம் எம்மாத்திரம்!


தொலைக்காட்சியில் ராமாயணம், மஹாபாரதம் போன்ற சீரியல்கள் வரும்போது எல்லாம் "பரந்தூ" என்ற வார்த்தை எத்தனை வாட்டி வரும் என்றும் "இந்தூ" எத்தனை வாட்டி வரும் பெட் கட்டி விளையாடியது மட்டும் நினைவில் இருக்கிறது.


கல்லூரி வரை தியேட்டர் சென்று பார்த்த இந்தி படங்கள் இரண்டே இரண்டு. ஒன்று கஜோலுக்காக "தில்வாலே துல்ஹனியா லே ஜெயங்கே" மற்றொன்று ஊர்மிலாவுக்காக "ரங்கீலா". என்ன பார்த்திருப்போம் என்பதை உங்கள் திறனுக்கு ஏற்ப கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று விட்டுவிடுகிறேன்.


பெங்களூர் வந்து திருமணம் எல்லாம் முடிந்து தியேட்டர் சென்று பார்த்த இந்தி படம் FANA. தங்கமணியை வரிக்கு வரி தொணத்தி எடுத்ததில் இனிமேல் இந்த ஆணியே டேஷ் வேண்டாம் என்று முடிவெடுக்க அதுவே தியேட்டர் சென்று பார்த்த கடைசி இந்தி படமாகி விட்டது என்பதை வரலாற்றில் வருத்தமுடன் எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன்.


ஆக, இந்த மாதிரி எருமை மாட்டின் மேல் மழை பெய்த மாதிரி கனத்த தோலுடன் இந்தியை எதிர் கொண்டால் இந்தி திணிப்பவர்கள் அவர்களாகவே சோர்ந்து போய் "இது பூட்ட கேஸ்!" என்று அமைதி ஆகி விடுவார்கள். ரொம்ப மெனக்கெட்டு இந்தி எதிர்ப்பை எல்லாம் காண்பிக்க வேண்டியதில்லை!


விருப்பம் இருப்பவர்கள் படியுங்கள், விருப்பம் இல்லாதவர்கள் வேலை நிமித்தமாக தேவையெனில் படித்து தொலையுங்கள் இல்லை என்னை மாதிரி ஜாலியாக இருங்கள். அதே சமயம் மும்மொழி கொள்கை என்ற ஒன்றை எல்லாம் யாராவது நினைத்து எல்லாம் பார்த்தால் கூடவாஞ்சேரிக்கு மேல் "பப்பு" வேகாது என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

திரும்பவும் சொல்கிறேன்..."ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா"!!!

No comments:

Post a Comment

ஆண்கள் சமையல் செய்வதிலிருந்து தப்பிப்பது எப்படி?

என்னுடைய வாட்சப் குழு ஒன்றில் என்னைப் போல சமையலறை பக்கம் எட்டிப் பார்க்காத பகுத்தறிவாளர் ஒருவர் எடை போடும் எந்திரம் என்றெண்ணி Induction ஸ்ட...