“பெரியோர்களே...! தாய்மார்களே...!”
1980 - களில் அடிக்கடி இந்த மாதிரி குரல்கள் ஒலிக்காவிடில் அது கண்ணம்மாப் பேட்டை கிடையாது!
முத்துரங்கன் சாலையில் மேட்லி முதல் தெருவுக்கு அருகாமையிலோ அல்லது மேட்லி சாலையிலோதான் மேடை அமைக்கப்படும். பகல் 12 மணியளவில் மேடை அமைப்பதற்கான அனைத்து சாமக்கிரியைகளும் வந்திறங்கும். சாலையில் பள்ளம் தோண்டி கம்பம் நட்டு மேடைக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் ஜோராக இருக்க சாலையின் இருபுறமும் ட்யூப் லைட்டுக்கான கம்பங்களும் ஒலிப்பெருக்கிகளுக்கான கம்பங்களும் நடப்பட்டு அவையும் ஆயத்தமாகும். இவற்றுக்கான மின்சாரம் திருடப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!
மாலை நான்கு மணியளவில் "நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேறும்..." என்று M.G.R. பாடல்களோ அல்லது "ஓடி வருகிறான்.உதயசூரியன்" என்று நாகூர் ஹனிபாவின் பாடல்களோ கட்சிகளுக்கேற்ப காதை பிளக்கும். கட்சி மீட்டிங்கிற்கு ஒரு வாரம் முன்னதாகவே புரட்சி புயல் வருகின்றார்! இளைய சூறாவளி வருகின்றார்! என்ற மாதிரி போஸ்டர்கள் தூள் பறக்கும்.
ஆறு மணிவாக்கில் வட்டம், ஒன்றியம் என்று ஒவ்வொருவராக அவரவர் திறமைக்கேற்ப எதிர் கட்சிகளை கிழிகிழியென்று கிழித்து தோரணம் தொங்க விடுவார்கள். வீட்டிலிருந்தே இத்தனையும் கேட்க முடியும். பேரானந்தம் போங்கோள்!
படபடவென்று பட்டாசு சத்தம் கேட்டால் ஸ்டார் பேச்சாளர் வந்து விட்டார் என்று அர்த்தம். அவர் உடனே மைக் பிடிக்க மாட்டார். உதிரி பேச்சாளர்கள் ஒரு நான்கைந்து பேர் தியாகச் செம்மல், கலங்கரை விளக்கம் என்று பல் கூட விளக்காமல் புகழ் மாலை, கவிதை, அந்தாதி, இத்யாதி இத்யாதி வாசிப்பர். இத்தனையும் கேட்டு விட்டு பல்லிளிக்க கடைசியாக மைக் பிடிப்பார் ஸ்டார் பேச்சாளர்.
“இப்படித்தான் கிரேக்கத்திலே! (அ) மாஸ்க்கோவிலே!” என்று பேச்சை ஆரம்பித்தார் என்றால் பாதி ஐரோப்பாவையும் சீனத்தையும் ஒரு கால் மணி நேரம் சுற்றி விட்டு தமிழ் நாட்டுக்கு வந்து நம் தாவு தீரும் வரை நொங்கெடுப்பார். உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன், உங்கள் சுண்டு விரலை தொட்டு கேட்கிறேன் என்று பார்ட் பார்ட்டாக உங்கள் பாகங்களை படம் வரைந்து பல கோரிக்கைகள் வைக்கைப்படவில்லையென்றால் அன்று சூரியன் மேற்கில் உதித்தாக அர்த்தம்!
பேச்சினூடே 127 -வது வட்டத்தின் சார்பாக அண்ணன் சை.கோ அவர்கள் இந்த பொன்னாடையை போர்த்துவாரென்று வகையில் சில பல பொன்னாடைகள் சார்த்தப்பட்டும் அவையே பற்றாக்குறையாக இருந்தால் recycling -ம் செய்யப்படும்.
எப்படி இவையெல்லாம் பசு மரத்தாணி போல ஞாபகம் இருக்கிறது என்றால் டீ.வீ. சேனல்கள் வருவதற்கு முன்னர் இந்த மீட்டிங்குகள்தான் எங்கள் பேட்டை வாசிகளின் பொழுதுபோக்கின் உச்சக்கட்டம். பொடியனான என்னையும் என் அப்பா அழைத்து கொண்டு போவார். எங்கள் வீட்டிலிருந்து நடை தூரம்தான். சாலையில்தான் அமர வேண்டும். செருப்பு அல்லது துண்டுதான் இருக்கை. பட்டாணி அல்லது வேர்க்கடலை, இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று அமைந்தால் செம காம்போ.
இப்படியாகத்தான் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, தீப்பொறி ஆறுமுகம், நன்னிலம் நடராசன் என்று தமிழ் கூறும் நல்லோர்கள்(?) பலர் எனக்கு அறிமுகம் ஆனார்கள். இதில் மேடையேறி காளிமுத்து அவர்களுக்கு கையெல்லாம் கொடுத்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
"கருவாடு மீனாகாது!
கறந்த பால் மாடி புகாது!"
என்ற இந்த சூப்பர் வசனங்கள் எல்லாம் காளிமுத்து அவர்கள் கூற நேரில் கேட்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றவன் என்பதை இங்கே மிகப் பணிவன்புடன் சொல்லிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்! பட்டுள்ளேன்! என்று கூறிக்கொண்டு உங்களிடிமிருந்து (எழுதி அடித்து திருத்தி திரும்ப எழுதி...கை வலிப்பதால்)விடை பெறுகின்றேன்! நன்றி ! வணக்கம்!
இன்னும் தொடரும்…
#TNAGAR
#தியாகராயநகர்
No comments:
Post a Comment