சில நேரத்தில் ஒரு பெயரின் காரணம் ஏன் எப்படி எவ்வாறு ஏற்பட்டது என்று ஆராய்ந்தோமானால் நாம் நம்முடைய “முடி” துறக்க வேண்டியிருக்கும்.
உதாரணத்திற்கு பஜ்ஜிக்கு பஜ்ஜி என்று ஏன் பேர் வந்தது என்று நாம் என்றாவது யோசித்து இருக்கிறோமா? பஜ்ஜி என்றவுடன் நாக்கு நம் மூளையின் உத்தரவின்றி நான்கு முழத்திற்கு இந்நேரம் நீட்டியிருக்கும். சரி! புள்ளிக்கு வருவோம். பாய்ண்டுக்கு வருவோம் என்பதைத்தான் கொஞ்சம் தமிழ் படுத்தினேன். உங்களை ரொம்பவே படுத்துகிறேன் என்பது புரிகின்றது!
"மது! அந்த செருப்பை போட்டுக்கிட்டு சின்னப்பொண்ணுக்கிட்ட நாலு இலை வாங்கிட்டு வாய்யா!!" - என்று தாத்தா வழக்கமாக இப்படித்தான் என்னை ஏவுவார்.
"ஏன்பா! இலை வாங்கிட்டு வான்னு சொன்னா பத்தாதா? எதுக்கு கூடவே அந்த செருப்பை போடற விஷயத்தையும் சொல்றீங்க?" என்று என் மாமா தாத்தாவை சத்தாய்க்க பொடியனாய் இருந்த நான் செருப்பை மாட்டுவேன்.
என் தாத்தாவின் வீடு (திருச்சி மெயின் கார்ட்கேட்) ஜபார்ஷா தெருவில் அங்கு விலாஸ் மளிகைக்கு பக்கத்தில் உள்ள குஜிலி தெருவில் இருந்தது. உடனே நீங்கள் குஜாலாக வேண்டாம். நிஜமாலுமே குஜிலி தெருதான். பெயர் காரணம் கூகிளாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த தெருவின் மறுமுனையில் உள்ள ஒரு வீட்டின் திண்ணைதான் சின்னப்பொண்ணு வழக்கமாக அமரும் இடம். அந்த வீடு பல அடுக்குகளாக இருக்கும். மழை பெய்தால் முதல் அடுக்கில் அமர்வார்.
சின்னப்பொண்ணு என்றவுடன் ஒரு சின்னப்பொண்ணை நீங்கள் எதிர்பார்த்தீர்கள் என்றால் நீங்கள் ஐய்யோ பாவம். ஐம்பது வயதொத்த நெடுநெடுவென உயரமுள்ள ஒல்லியும் இல்லாத குண்டும் இல்லாத அக்மார்க் கிராமத்துப் பெண்மணி.
கற்பனை ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தேனென்றால் அங்கேதான் போய் நிற்பேன். கடை என்று அறியப்பட்ட இடத்தை சுற்றி இலைக் கட்டுகளாக இருக்கும். இலையை நறுக்கி கொண்டிருப்பார் புகையிலையை போட்டுக்கொண்டு.
"சின்னப்பொண்ணு! தாத்தா நாலு இலை வாங்கி வர சொன்னார்!" - எனக்கும் சின்னபொண்ணுதான். அப்போதுதான் பிறந்த குஞ்சு குளுவான்களுக்கும் அவர் சின்னப்பொண்ணுதான்.
"யாரு? அங்கு விலாஸ் காரர் பேரனா?" என்று முகமலர்ந்து பேசுவார். எல்லாம் நுனி இலை! ஒரு ஏடு இலை கூட வைக்க மாட்டார். பார்த்து பார்த்து ஆசையாய் கட்டி கொடுப்பார்.
“போய்யா ராசா! காச தாத்தாகிட்ட வாங்கிக்கிறேன்!”.
என் தாத்தா மளிகை கடை வைத்திருந்ததால் இந்த மாதிரி முக்கால் வாசி பேரிடம் பணம் கொடுத்து எதையும் வாங்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் மளிகை கடையில் சாமான் வாங்கும் போது கணக்கு சொல்லி கழித்து விடுவார்கள்.
சின்னப்பொண்ணு என்பது அவர் சிறுவயதாக இருக்கும் போதே கூப்பிட ஆரம்பித்து அப்பெயரே நிலைத்து விட்டதோ இல்லை உண்மைப் பெயரே சின்னபொண்ணுதானோ என்பது அந்த ஸ்ரீரங்கநாதனுக்கே வெளிச்சம்!

No comments:
Post a Comment