Sunday, April 9, 2017

அங்காடித் தெரு!

ரகளைபுரம்! கலவர பூமி!

இப்படி எல்லாம் ஆரம்பித்தால்தான் படிப்பேனாக்கும் ஆட்கள் இருப்பதால் இப்படி ஒரு தொடக்கம்! உங்கள் வீட்டைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைத்துவிட்டோம் என்று நீங்கள் பகடி செய்தாலும் கவலையில்லை!

சென்னையில் எங்கள் வீடு இருக்கும் தீ.நகரைப் பற்றிதான் இந்த முன்னுரை. மாட்லி சாலைக்கும் நடேசன் தெருவிற்கும் நடுவில் உள்ளது எங்கள் தெரு. இப்படி சொன்னால் உங்களுக்கு சட்டென்று புரியாது. ரங்கநாதன் தெரு எங்கள் தெருவிலிருந்து இரண்டு தெரு தள்ளி என்று சொன்னால் 'அட' என்பீர்கள்!

எங்கள் தெரு ஒரு "முட்டுச் சந்து" வேறு. அப்பொழுது எங்கள் தெருவில் உள்ளவர்கள் மட்டுமே வருவார்கள் என்று நினைத்தால் அதுதான் இல்லை! தீபாவளி அல்லது பொங்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்னேரே தலைவலி ஆரம்பித்துவிடும். காலை ஒன்பது மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தால் தி.நகர் ஷாப்பிங் வரும் மக்கள் தெருவின் இரண்டு பக்கமும் இருசக்கர வாகனங்களை போட்டு விட்டு சென்று விடுவார்கள். நான்கு வண்டி எங்கள் கேட்டின் முன்னேயே நிற்கும். அடே! உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா என்று நம்மை நாமே நொந்துகொண்டு அக்கறையாக அவர்கள் வண்டியை அலேக்காக பொறுமையாக இடம் மாற்றி வைத்து விட்டு நம் வண்டியை வெளியே எடுக்க வேண்டும். கொஞ்சம் வருடம் முன்னர் எங்கள் தெருவுக்கு தனி வாச்மேன் போட்டு கேட் எல்லாம் போட்டது தனிக்கதை!

எங்கள் தெரு மட்டுமல்ல உஸ்மான் ரோட்டை ஒட்டி உள்ள அனைத்து தெருக்களிலும் இதுதான் பிரச்னை. மனிதர்கள் நிற்பதற்கே இடமில்லாத இடத்தில் உள்ள ஷாப்பிங் "மெக்கா"வில்   வண்டியை பார்க் செய்வதற்கு இடம் கிடைத்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள், நாங்கள்?

சென்னையில் உள்ள மக்களெல்லாம் வண்டி கட்டி ஷாப்பிங் வரும் எங்கள் ஊருக்கு நாங்கள் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்றால் "நடராஜா" சர்வீஸ்த்தான். ரொம்ப தூரமில்லை. கில்ட் தெருவில் இரண்டு எட்டு வைத்து நடேசன் தெருவில் உள்ள ஒரு குறுகிய சந்தைப் பிடித்தால் ரங்கநாதன் தெருவின் நடுவில் நிற்போம். அதற்கு பிறகு நடக்க எல்லாம் வேண்டியதில்லை மக்களே நம்மை முன்னேயும் பின்னேயும் நகர்த்தி செல்வர். பாசக்காரர்கள்!

தி.நகர் ஷாப்பிங் உலகின் தலையாய தெரு ரங்கநாதன் தெரு. அப்பா அம்மா தவிர்த்து எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாக விற்று கொண்டிருப்பார்கள். ஆல் க்ளாஸ் மக்களையும் திருப்தி படுத்த முடியுமா என்று யாரவது ரூம்  போட்டு யோசனை செய்து கொண்டிருந்தால் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ரங்கநாதன் தெருவிற்கு டிக்கெட் எடுங்கள்!


லட்சங்களில் நகையும் கிடைக்கும், நூறு ரூபாய்களில் இமிடேஷன் வகைகளும் கிடைக்கும். இந்த உதாரணம் புடவைக்கும், செருப்புக்கும், பாத்திரங்கள் என அனைத்துக்கும் பொருந்தும். சல்லீசான விலையில் சமோசா, பாப் கார்ன், கரும்பு ஜூஸ்! அம்மா உணவகம் வருவதற்கு முன்னரே சரவணா ஸ்டோர்ஸ்-இன் மலிவுவிலை உணவகம் ஒரு வழிகாட்டி என்றே சொல்லலாம்.

ஷாப்பிங் மால்கள் கற்கவேண்டிய வியாபார பாடங்கள் இந்த அங்காடித் தெருவில் நிறைய இருக்கிறது. ஷாப்பிங் போலாமா?

No comments:

Post a Comment

ஆண்கள் சமையல் செய்வதிலிருந்து தப்பிப்பது எப்படி?

என்னுடைய வாட்சப் குழு ஒன்றில் என்னைப் போல சமையலறை பக்கம் எட்டிப் பார்க்காத பகுத்தறிவாளர் ஒருவர் எடை போடும் எந்திரம் என்றெண்ணி Induction ஸ்ட...